சென்னையைச் சேர்ந்த ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா என்பவர் அரசை விமர்சித்து ஒரு கேலிச்சித்திரம் வரைந்து இருந்தார். அதில் ஒரு குழந்தை உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் தரையில் படுத்து கிடப்பது போலவும், அதனை தமிழக முதல்-அமைச்சர், நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் நிர்வாணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் கார்ட்டூன் வரைந்து இருந்தார். நெல்லையில் நடந்த கந்துவட்டி மரணத்தை அடுத்து இந்த கார்ட்டூன் வெளியாகி இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார், பாலா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் 4 போலீசார், திடீரென ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் பாலாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி நெல்லை அழைத்து வந்தனர். இன்று காலை அவர்கள் வாகனம் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தது. அங்குள்ள மாவட்ட சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து உயர் அதிகாரிகள் பாலாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை இன்று நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார்.
ஜாமீன் பெற்ற பின் பாலா கோர்ட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது பாலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த வழக்கை விசாரித்து வரும் அனிதா அவரை அழைத்து செல்ல முயன்றார். இதற்கு பாலாவின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘கோர்ட்டு ஜாமீன் வழங்கிய பின்னர் ஒருவரிடம் விசாரணை நடத்துவது தவறு. அவர் மீது பொய் வழக்கு போட போலீசார் முயற்சி செய்கின்றனர்’ என கூறினர்.
இதனால் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல்கள் நீதிபதி ராமதாசிடம் முறையிட்டனர். நீதிபதி பாலாவுக்கு ஜாமீன் வழங்கி இருப்பதால் போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். தற்போது அவரை விசாரிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து பாலாவை வக்கீல்கள் பாதுகாப்பாக சங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் பாலாவின் வக்கீல் வாஞ்சிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பின் நாங்கள் அவரை பார்க்க நின்றிருந்தோம். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அவசரமாக வந்து பாலாவின் கையை பிடித்து இழுத்து சென்றார். நாங்கள் தடுத்து நிறுத்தி நீதிபதியிடம் முறையிட்டோம். ஜாமீன் பெற்றவரை எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்று நீதிபதி கூறினார்.
பாலா மீது மீண்டும் பொய் வழக்கு போடும் நோக்கத்திலேயே போலீசார் அவரை அழைக்க வந்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன் பாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எந்த கொலை குற்றமும் செய்யவில்லை. அரசு நிர்வாகம் செயல் இழந்துள்ளதை குறிப்பிட்டு கார்ட்டூன் வரைந்தேன். தொடர்ந்து கார்ட்டூன் வரைவேன். எனது தொழில் கார்ட்டூன் வரைவது. இது கலெக்டரை பாதித்திருந்தால் அது அவரது உளவியல் ரீதியான பிரச்சனை.
4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தின் அவமான நாள். இதை வெளியில் கொண்டு வரவே கார்ட்டூன் வரைந்தேன். அன்றைய எனது மனநிலையின் வெளிப்பாடுதான் இந்த கார்ட்டூன். குழந்தைகள் தீயில் எரிந்தது, 2 குழந்தைகளுக்கு தந்தை என்ற முறையில் இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.
கலெக்டரை தனிப்பட்ட முறையில் கார்ட்டூன் வரைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. மத்திய அரசையும், மாநில அரசையும் நான் விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததால் கலெக்டரை தூண்டுகோலாக வைத்து இந்த வழக்கை பதிவு செய்தனர். வழக்கை கண்டு பயப்பட மாட்டேன். சட்டப்படி சந்திப்பேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பற்றி விமர்சித்து நான் பல முறை கார்ட்டூன் வரைந்துள்ளேன். ஆனால் இந்த ஆட்சியாளர்களால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகநூலில் ஆட்சியை பற்றி விமர்சித்தால் கூட கைது செய்கிறார்கள். கந்து வட்டி பிரச்சனையில் 6 முறை ஒருவர் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இத்தகையை ஆட்சியாளர்களின் நடவடிக்கையை பதிவு செய்வது தான் எனது நோக்கம்.