திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 25). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சித்தாமூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (24). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் அருணாசலத்தின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
தனது காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் நடக்க இருப்பது பற்றி தகவல் அறிந்ததும் கவுசல்யா மனவேதனை அடைந்தார். நேற்று மாலை அவர் திடீரென்று சித்தாமூரில் உள்ள தனது காதலன் அருணாசலம் வீட்டுக்கு சென்றார்.
அருணாசலத்தின் பெற்றோரிடம், நானும், அருணாசலமும் காதலித்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார். ஆனால், அதற்கு அருணாசலத்தின் பெற்றோர் மறுத்து விட்டனர்.
உடனே கவுசல்யா காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அருணாசலத்தின் பெற்றோர் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுசல்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அவர் தனது போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீசார் கவுசல்யாவை மீட்டு திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.