செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் கொல்லப்பட்டு கிடந்தவர் யார்?: கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

தோப்பூர் கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே தோப்பூர் கடற்கரையில் கடந்த 23-ந்தேதி காலையில் ஆண் பிணம் கிடப்பதாக திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

அந்த நபரின் கழுத்து மற்றும் இரண்டு கைகளின் மணிக்கட்டுகளில் உள்ள ரத்த நாளங்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. யாரோ மர்மநபர்கள் முன்பகை காரணமாக ரத்த நாளங்களை துண்டித்து கொலை செய்துவிட்டு உடலை கடற்கரையில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்றவர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் விலை உயர்ந்த கைக் கடிகாரம், விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தார். ஆகவே அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? என்பதை கண்டுபிடிக்க திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கொலை செய்யப்பட்டவர் மற்றும் அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்று இதுவரை துப்பு துலங்கவில்லை.

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் துப்பு எதும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.