விபத்து 
செய்திகள்

கெலமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாலை மலர்

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது19). அதே பகுதியை சேர்ந்தவர் நாராயணப்பபா மகன் சிவக்குமார் (18), அகில் (19).  இவர்கள் 3 பேரும் நேற்று எச்சட்டிபள்ளி கிராமத்தில் உள்ள நண்பரின் வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு அவர்கள் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.  

இதையடுத்து அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது மாசிநாயக்கனஅள்ளி பாலம் அருகே வந்த போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.