விபத்து 
செய்திகள்

உடுமலையில் டிப்பர் லாரி மோதி தந்தை- மகன் பலி

உடுமலையில் டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை- மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பால் வியாபாரி. இவரது மனைவி பிருந்தா (30). இவர்களது மகன் தரனேஷ் (7). கார்த்திகேயனின் பெற்றோர் அருகில் உள்ள சின்னப் பாபேனூத்துவில் வசித்து வருகிறார்கள்.

அங்கு வளர்த்து வரும் பசுமாட்டில் பால் கறந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பால்வினியோகம் செய்து வந்தார்.

நேற்று மாலை வழக்கம்போல் சின்னப்பாப்பனூத்துக்கு பால் வினியோகத்துக்கு புறப்பட்டார். அப்போது அவரது மகனையும் உடன் அழைத்துச்சென்றார்.

தாய் வீட்டில் பசுமாட்டில் பால் கறந்து பின்னர் அந்த பகுதியில் பால் வினியோகம் செய்தார். வினியோகம் முடிந்த பின்னர் மாலை வீட்டுக்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் உடுமலை- ஆனைமலை ரோட்டில் சென்றது. பி.ஏ.பி. வாய்க்கால் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென நின்றது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரியின் பின்னால் மோதியது.

இதில் தந்தையும், மகனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சத்தம்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். தந்தையும், மகனும் உயிருக்கு போராடினர். ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் தந்தையும், மகனும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

விபத்து குறித்து தளி இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை டிரைவர் புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த சிவக்குமார் (45) என்பவரை கைது செய்தார்.