செய்திகள்

அன்னூரில் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவன் பலி

சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் இறந்தான். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலன். கார்பெண்டர். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் அன்னூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு தினேஷ்குமார் சென்றார். மதியம் உணவு இடைவேளையின் போது சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சாப்பிட சென்றார். பின்னர் சைக்கிளில் பள்ளிக்கு திரும்பினார். பள்ளி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது அன்னூரில் இருந்து அவிநாசி நோக்கி சென்ற டிப்பர் லாரி சைக்கிளில் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான லாரி டிரைவர் தர்மபுரியைச் சேர்ந்த யாரப் (27) என்பவரை தேடி வருகிறார்கள்.

அன்னூர் அரசு பள்ளி அருகே ரோட்டோரத்தில் இரு பக்கமும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் புகார் கூறினர். எனவே ரோட்டோத்தில் இருந்த காய்கறி கடைகள், பழக்கடைகள், உணவு தானிய கடைகள், குளிர்பான கடைகள் உள்பட 50- க்கும் மேற்பட்ட கடைகளை போலீசார் மற்றும் பேரூராட்சிஅதிகாரிகள் அகற்றினர்.