திருப்பதியில் பல்வேறு இடங்களை தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம் 
செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் கார்டு) வழங்கப்பட உள்ளது. அந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

மாலை மலர்

திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு திருமலையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் அதிக நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு, அதிக நேரம் பக்தர்களை தங்க வைக்காமல் இருக்க, அவர்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் கார்டு) வழங்கப்பட உள்ளது. அந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

அதற்காக, திருமலையில் உள்ள மாதவ நிலையம் தங்கும் விடுதி, அமைனிட்டி காம்ப்ளக்ஸ்-2, சன்னிதானம் தங்கும் விடுதி மற்றும் இலவச தரிசன பக்தர்கள் செல்லும் கவுண்ட்டர்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அதற்காக எத்தனை கவுண்ட்டர்கள் தேவைப்படும் என்றும், எந்தந்த இடங்களில் கவுண்ட்டர்களை அமைக்கலாம் என்றும் ஆய்வு செய்தோம்.

இதுதொடர்பாக தேவஸ்தான என்ஜினீயரிங் துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு திருமலையில் பல்வேறு இடங்களில் தரிசன அனுமதி அட்டை வழங்க கவுண்ட்டர்கள் தொடங்கப்படும். அதில் நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் கார்டு) இலவச தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.