நிர்பயா கொலை குற்றவாளிகள். 
செய்திகள்

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் ஜெயிலில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெறுகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ந்தேதி தூக்கில் போட டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி திகார் சிறையில் உள்ள 3-ம் எண் அறை பகுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடுவதற்காக மீரட்டில் உள்ள தூக்கு போடும் ஊழியர் வரவழைக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில் டெல்லி திகார் ஜெயிலில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டு விட்டது.

தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கயிறு, முகமூடிகளும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி ஐகோர்ட்டு தூக்கு தண்டனை தேதியை முடிவு செய்து அறிவித்து இருப்பதால் தூக்கு தண்டனையை எப்படி நிறைவேற்றுவது என்று டெல்லி திகார் ஜெயில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து திகார் ஜெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோர்ட்டு உத்தரவு வந்ததும் இறுதிக் கட்ட பணிகள் செய்து முடிக்கப்படும்” என்றார்.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் இடுவதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று 4 பேரையும் தூக்கில் இடுவதற்கான ஒத்திகைகள் நடைபெறுகின்றன.

தூக்கில் போடப்படும் 4 குற்றவாளிகளின் உடல் எடைக்கு ஏற்ப 60 கிலோ பொம்மைகள் தயார் செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடத்தப்படுகிறது. கயிறு வலுவாக உள்ளதா? தூக்கில் தொங்கவிடப்படும் பகுதி சரியாக இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

இதற்கிடையே 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை-மாலை இரு நேரமும் டாக்டர்கள் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

4 குற்றவாளிகளுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் 2-ம் எண் ஜெயில் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் மட்டும் 4-ம் எண் ஜெயில் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளான்.

மற்ற கைதிகளுடன் அவர்கள் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் பீதியுடன் காணப்படுகின்றனர். அவர்களை திகார் ஜெயில் அதிகாரிகள் குழு ஒன்று கண்காணித்து வருகிறது.

4 குற்றவாளிகளுக்கும் மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவர்கள் படிப்பதற்காக ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களும் படிப்பதற்கு கொடுக்கப்படுகின்றன.

அவர்களை பார்ப்பதற்கும், பேசுவதற்கும் அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 2 தடவை உறவினர்கள் வந்து சந்திக்கலாம் என்று திகார் ஜெயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தூக்கில் போடுவதற்கான காலஅவகாசம் குறைவாக இருப்பதால் உறவினர்கள் சற்று கூடுதல் நேரம் குற்றவாளிகளுடன் இருந்து விட்டு செல்லலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திகார் ஜெயிலுக்கு வந்து 4 குற்றவாளிகளும் தூக்கில் போடப்படும் பகுதியை ஆய்வு செய்தனர். 21-ந்தேதி மாலை இறுதி கட்ட ஆய்வு பணிகள் நடைபெறும்.

அவர்கள் கொடுக்கும் சான்றிதழின் அடிப்படையில் 22-ந்தேதி காலை 7 மணிக்கு 4 பேரும் தூக்கில் போடப்படுவார்கள்.

ஒவ்வொரு குற்றவாளியும் தனித்தனியாக தொங்க விடப்படுவார்கள். தூக்கு கயிறு அறுந்து விட்டால் உடனடியாக மாற்று கயிறு பயன்படுத்தப்படும். இதற்காக தலா 2 மாற்று கயிறுகள் வீதம் மொத்தம் 8 தூக்கு கயிறுகள் தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் உயிரிழந்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக டாக்டர்கள் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் போது மாஜிஸ்திரேட்டு, திகார் ஜெயில் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, மருத்துவ அதிகாரிகள் 2 பேர் என 5 பேர் மட்டுமே இருப்பார்கள்.

மற்றபடி வேறு யாரும் அருகில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 4 குற்றவாளிகளுக்கும் இறுதி விருப்பம் கேட்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும். குற்றவாளிகள் விரும்பினால் அவர்களது மத ரீதியிலான வழிபாட்டுக்கும் அனுமதி வழங்கப்படும்.

தூக்கு தண்டனை மேடையில் இருந்து சற்று தொலைவில் 10 போலீஸ்காரர்கள், 2 ஏட்டுகள் தயார் நிலையில் இருப்பார்கள். ஜெயில் கைதிகள் அனைவரும் அறைக்குள் பூட்டப்பட்டு இருப்பார்கள்.

7 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். அன்று காலை 4 குற்றவாளிகளுக்கும் புத்தாடைகள் வழங்கப்படும். சிறப்பு உணவுகளும் வினியோகிக்கப்படும்.

4 குற்றவாளிகளும் அவர்களது அறையில் இருந்து ஒருவர் பின் ஒருவராக தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுவார்கள். தூக்கு மேடை மற்றும் தூக்கு கயிறை பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் கண்களை துணியால் மூடி அழைத்து வருவார்கள்.

அவர்களது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருக்கும். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டதும் அவர்களது கால்களும் கட்டப்படும். பிறகு தலையை மூடி முகமூடி அணிவார்கள். அதன் பிறகு கழுத்தில் இறுக்கமாக சுருக்கு கயிறு போடப்படும்.

இதைத் தொடர்ந்து ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டதும் குற்றவாளிகள் தூக்கில் தொங்க விடப்படுவார்கள். உயிர் பிரியும் வரை அவர்களது உடல் தூக்கில் தொங்கியபடி இருக்கும். சுமார் 30 நிமிடங்கள் தூக்கு கயிறிலேயே உடல் தொங்கி கொண்டு இருக்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு டாக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும். அவர் குற்றவாளி உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்த பிறகு உடல் தூக்கு கயிற்றில் இருந்து தனியாக பிரித்து எடுக்கப்படும்.

அதன் பிறகு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு 4 பேர் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். உடனடியாக உடலை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ உத்தரவிடப்படும்.

ஊர்வலம் நடத்தியோ அல்லது உறவினர்கள் திரண்டு வந்தோ இறுதி சடங்குகளை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்படும். எனவே 22-ந்தேதியே 4 குற்றவாளிகளின் உடல்களுக்கும் இறுதி சடங்குகள் முடிந்து விடும்.