திருவெறும்பூர்:
திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடிபெல்நகர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 15-ந்தேதி 5 மர்ம நபர்கள் காவலாளி மருதுவை கத்தி முனையில் மிரட்டி தாக்கி எந்திரத்தை உடைக்க கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது கடப்பாறை, கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். நீண்ட நேரமாகியும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியாததால் தப்பிச் சென்று விட்டனர். மயக்கம் தெளிந்த மருது இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் மற்றும் சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் துவாக்குடி போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை பிரிவினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அவர்களும் சம்பவ இடத்தில் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்தனர்.
வங்கி கிளை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு குற்றவாளி களை தேடி வந்தனர். வங்கி ஏ.டி.எம்.ல் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அதில் ஒருவன் முகமூடி அணிந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் வாழவந்தான் கோட்டை பிரிவு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே டூவிலரில் வந்தவர்களை மறித்து விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும் முன்னுக்குபின் முரணான பதிலை அளித்ததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரித்தனர். மேலும் இருவரை சோதனை செய்ததில் பின்னால் அமர்ந்து வந்தவர் தனது முதுகில் சொருகி வைத்திருந்த நீளமான கத்தியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் துவாக்குடி ராவுத்தன் மேட்டை சேர்ந்த கண்ணன் (48), மணிகண்டன் (29) ஆகிய இருவரும் டூவீலரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இவர்களின் அடையாளமும், ஏ.டி. எம். கொள்ளை முயற்சி ஈடுபட்டவர்களின் அடையாளங்கள், தடயங்கள் ஒத்து போகவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் பிடிபட்ட இருவரும், அவர்களது கூட்டாளிகளான ராம்குமார் (28), ஸ்டாலின் (24), அஜித் குமார் (21) ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்தபட்ட டூவீலர், முகமூடி, கத்தி, கடப்பாறை, இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.