செய்திகள்

காங்கிரஸ் பக்கம் சேர்ந்து பா.ஜ.க.வுக்கு ‘செக்’ வைத்த 3 இளம் தலைவர்கள்

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இடங்கள் குறைந்ததற்கு அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி, ஹர்த்திக் பட்டேல் ஆகிய 3 இளம் தலைவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததே காரணமாக தெரியவந்துள்ளது.

மாலை மலர்

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 6-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றினாலும் கடந்த முறையைவிட தற்போது வெற்றி பெற்ற இடங்கள் குறைந்துள்ளன.

2012-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த தேர்தலில் 99 இடங்களில் தான் வெற்றி பெற்றது. அதாவது பெரும்பான்மையை விட 7 தொகுதிகள்தான் கூடுதலாகும். கடந்த முறையை விட தற்போது 16 இடங்கள் பா.ஜனதாவுக்கு குறைவாக கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரசுக்கு 19 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. 2012 தேர்தலில் அந்த கட்சி 61 இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது 80 தொகுதிகளை கைப்பற்றியது.

குஜராத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு இடங்கள் குறைந்ததற்கு 3 இளம் தலைவர்களே காரணமாவார்கள். அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி, ஹர்த்திக் பட்டேல் ஆகியோர் காங்கிரசுக்கு பக்க பலமாக இருந்து கூடுதல் இடங்களை பெற வைத்தனர்.

இட ஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்த்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, இதர பிற்பட்டோர் தலைவர் அல்பேஷ் தாகூர் ஆகியோர் ராகுல்காந்திக்கு போர் வீரர்கள் போல் இருந்து பலம் வாய்ந்த பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

சவுராஸ்டிரா மண்டலத்தில் பா.ஜனதா 13 இடங்களை இழந்தது. இதற்கு ஹர்த்திக் பட்டேல் பிரசாரம் முக்கிய பங்கு வகித்தது. படேல் சமூகத்தினர் பா.ஜனதாவுக்கு வாக்களித்து வந்தனர். ஹர்த்திக் படேலின் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக அந்த ஓட்டுகள் தற்போது பா.ஜனதாவுக்கு குறைந்தன. அவர் காங்கிரசுடன் ‘கை’ கோர்த்ததால் அந்த கட்சிக்கு பலன் கிடைத்தது.

படேல் சமூகத்தினர் மற்றும் விவசாயிகளால் காங்கிரசுக்கு சவுராஸ்டிரா மண்டலத்தில் 15 இடங்கள் கடந்த முறையை விட கூடுதலாக கிடைத்தது. ராஜ்கோட், சூரத், அகமதாபாத் ஆகிய நகர் பகுதிகளில் படேதார் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு எதிராக விழுந்தன.

இதர பிற்பட்ட பிரிவினரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்கு விழ அல்பேஷ் தாகூர் பிரசாரம் முக்கிய பங்கு வகித்தது. அவர் ராதாபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஹர்த்திக் படேல் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரது பிரசாரம் பா.ஜனதாவுக்கு எதிராக கடும் வேகமாக இருந்தது.