ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இன்று காலை சுமார் 4:30 மணியளவில் புல்வாமா மாவட்ட போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியதாக போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில், ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும், மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு போலீசார் உட்பட பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட போலீஸ் குடியிருப்பு கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கி இருந்தனர்.