செய்திகள்

தொடர் கனமழையால் மேகாலயாவில் கடும் நிலச்சரிவு: 3 பேர் பலி

வடஇந்தியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல மாநிலங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேகாலயாவில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர்.

பருவமழை தொடங்கிவிட்டதால் அசாம், திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேகாலாயாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ரி-போய் மாவட்டத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள உமியம் ஏரியில் உள்ள ஊழியர்களின் முகாம் அருகே நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன இரு பெண்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இரு இளம்பெண்கள் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் இந்த நிலச்சரிவில் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து வருவதாக கூறிய அதிகாரிகள், காயமடைந்த 9 பேரை, அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறினர்.

SCROLL FOR NEXT