செய்திகள்

டிரம்ப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இந்தோனேசிய மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசிய மக்கள் அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

’பாலஸ்தீனம் எங்கள் இதயம்’ என்ற பதாகைகளுடன் அமெரிக்க அரசுக்கும் டிரம்ப்புக்கும் எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளியான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்தீனியர்களை காப்பாற்றுமாறு இஸ்லாமிய மாநாட்டு கூட்டமைப்பிடமும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் இந்தோனேசிய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.