சென்னை:
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பகுதி பகுதியாக நிறை வேற்றப்பட்டு வருகிறது.
தற்போது நேரு பூங்கா- சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக தினமும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகின்றன. சேவை ஒருபுறம் நடந்தாலும் சுரங்கப்பாதை பணிகள் ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதை வழியாகவும் அங்கிருந்து விமான நிலையம் வரை உயர் மட்டப்பாதை வழியாகவும் மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. அண்ணா சாலையில் சுரங்கம் தோண்டும் பணி கடந்த மாதமே முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது தாமதமாகி அடுத்த மாதம் (டிசம்பர்) தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஆயிரம் விளக்கில் இருந்து ஏ.ஜி.ஆபீஸ்- தேனாம் பேட்டை வரை பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணி முடிவடைய இன்னும் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசினர் தோட்டத்தில் இருந்து அண்ணாசாலை வரை சுரங்கம் தோண்டும் பணியில் 2 எந்திரங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈடுபடுத்தப்பட்டன. இதில் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த மாதம் (அக்டோபர்) ஏ.ஜி.- தேனாம்பேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணியை முடித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
அண்ணாசாலையில் சுரங்கம் தோண்டும் பணியை விரைவாக முடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அந்த அளவிற்கு முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த பணி நிறைவடைய மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என்று தெரிகிறது.
அந்த பகுதியில் மண்ணின் தன்மை சற்று சவாலாக இருந்ததால் மிக கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் திட்டம் 1-ல் இந்த பணி மட்டுமே நிலுவையில் உள்ளது.
45 கிலோ மீட்டர் மொத்த தூரத்தில் 24 கிலோ மீட்டர் சுரங்கப்பாதை முடிந்துள்ளது. இதேபோல விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் சுரங்கப்பாதை பணியும் நிறைவடைந்துள்ளது.
ஏ.ஜி.ஆபீஸ்- டி.எம்.எஸ். பகுதியில் 2-வது சுரங்கம் தோண்டும் மெஷின் பணியை முடித்தவுடன் தண்டவாளம் அமைக்கும் பணி, கான்கிரீட் வேலை நடைபாதை போன்ற பணிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.