கோப்புபடம் 
செய்திகள்

தூத்துக்குடி நிகிலேஸ்நகர் பகுதியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி நிகிலேஸ்நகர் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நிகிலேஸ்நகர் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதிக்கு சாலை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி சார்பில் நிகிலேஸ் நகர் அருகே மற்ற பகுதிகளுக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதை அறிந்த நிகிலேஸ்நகர் பகுதி மக்கள் அங்கு சென்று மாநகராட்சி பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே தூத்துக்குடி சிப்காட் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.