நகை பறிப்பு கோப்பு படம் 
செய்திகள்

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு - பைக் கொள்ளையர்கள் கைவரிசை

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்களிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி தனலெட்சுமி (வயது 56). இவர் இன்று காலை அண்ணாநகர் 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தனலெட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

இதே போல் மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மணிமேகலை (64) என்பவர் நேற்று இரவு அண்ணாநகர் 12-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்க கும்பல் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். ஆனால் மணிமேகலை செயினை பிடித்தவாறு தப்ப முயன்றார். இதில் 5 பவுன் எடை கொண்ட பாதி செயின் கொள்ளையர்கள் கையிலும், மீதி செயின் மணிமேகலை கையிலும் சிக்கியது. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.