கோப்புப்படம் 
செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 21-வது கட்டமாக ஒருநபர் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21-வது கட்டமாக ஒருநபர் ஆணையம் விசாரணை நேற்று தொடங்கியது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

அதன்படி, ஏற்கனவே 20 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 465 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 634 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 4 மாதமாக விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. 4 மாதங்களுக்கு பிறகு நேற்று 21-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் தொடங்கியது.

இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது அரசு வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட அபிடவிட் அடிப்படையில், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 26 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த விசாரணை வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.