செய்திகள்

தூத்துக்குடி என்ஜினீயர் கொலை: 7 மாதம் தலைமறைவாக இருந்த சட்டக்கல்லூரி மாணவி கைது

தூத்துக்குடி என்ஜினீயர் கொலையில் 7 மாதம் தலைமறைவாக இருந்த சட்டக்கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

நெல்லை:

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(வயது 47). கம்ப்யூட்டர் என்ஜினீயர்.

அமெரிக்க குடியுரிமை பெற்று நீண்டகாலமாக அங்கு வசித்து வந்தார். இவருடைய மனைவி முத்துசெல்வி. ஊருக்கு திரும்பி வந்ததும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு வக்கீலை நாடினார். கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பாளையங்கோட்டைக்கு வக்கீலை பார்க்க காரில் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவருடைய தாய் அம்மைமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை தேடி வந்தனர். விசாரணையில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் மேலூரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால், முத்து கிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

ராஜகோபாலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ராஜகோபால் மனைவி பாண்டி துரைச்சி(22) சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு வக்கீலிடம் உதவியாளராக சேர்ந்து வக்கீல் பயிற்சி எடுத்து வந்தபோது முத்து கிருஷ்ணனுக்கும், பாண்டி துரைச்சிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதை கண்டித்தும் கேட்காததால் ராஜகோபால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துகிருஷ்ணனை கொன்று நெல்லை அருகே ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டான் குழியில் உடலை காருடன் மூழ்கடித்தது கடந்த ஜூலை மாதம் தெரிய வந்தது.

இந்த வழக்கில் ராஜகோபால் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். ராஜகோபாலின் மனைவி பாண்டி துரைச்சி மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை போலீசார், 7 மாதங்களுக்கு பிறகு பாண்டி துரைச்சியை நேற்று கைது செய்தனர். அவரை நெல்லை ஜே.எம். 1-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த விவரத்தை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் பாண்டி துரைச்சி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்திருப்பதாக போலீசார் கூறினர்.