பொள்ளாச்சி:
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலை சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன்(55), இவர் தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்த பணிகளை செய்துவந்தார்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். கடந்த 22-ந் தேதி குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கருணாகரன் கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கருணாகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலை சேர்ந்த சரவணன்(27), சக்திவேல்(20) ஆகியோர் பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் சரண்அடைந்தனர்.
அவர்களை வருகிற 2-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.