மதுரை:
ரெயில்வேதுறையை தனியாருக்கு கொடுப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. முக்கிய தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் ரெயில்பாதைகளை தனியாருக்கு கொடுத்து வருகிறது.
அதனைதொடர்ந்து, தமிழகத்திலும் ரெயில்கள் மற்றும் ரெயில்பாதைகள் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளன. இதற்கு வசதியாக பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும், ஒரு சில ரெயில்களின் நிறுத்தங்களை நீக்கவும் தென்னக ரெயில்வே, மத்திய ரெயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, நாகர்கோவில்-கோவை இடையே மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த இணைப்பு ரெயில் பெட்டிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வ.எண்.22667) செல்ல விரும்பும் தூத்துக்குடி பயணிகளுக்கு தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56747) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 11.15 மணிக்கு வந்துசேரும்.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலில்(வ.எண்.22668) தூத்துக்குடி பயணிகள் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஒரு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56748) நள்ளிரவு 3.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும்.
குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடியில் இருந்து இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலுக்கான இணைப்பு ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக தூத்துக்குடியில் இருந்து பாசஞ்சர் ரெயில் மூலமாக மணியாச்சி ரெயில் நிலையம் வந்து அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு செல்ல வேண்டும். இதற்காக தூத்துக்குடி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56767/56768) இரு மார்க்கங்களிலும் மணியாச்சி வரை இயக்கப்பட உள்ளது.
குருவாயூர் ரெயிலில் (வ.எண்.16127/16128)சென்னை செல்ல விரும்பும் தூத்துக்குடி பயணிகள் தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56745) ஏறி காலை 9.15 மணிக்கு மணியாச்சி ரெயில் நிலையம் வந்து சேர வேண்டும். அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரசில் சென்னை செல்ல வேண்டும்.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயிலில்(வ.எண்.16129/16130) தூத்துக்குடி பயணிகள் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56746) இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும்.
அதேபோல, தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் 9.15 மணிக்கு மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடையும். அங்கிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரெயில்(வ.எண்.56768) மாலை 5.15 மணிக்கு மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
தென்னக ரெயில்வேயின் இந்த நடவடிக்கை தூத்துக்குடி பயணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.