செய்திகள்

தொண்டி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிராம மக்கள் கோரிக்கை

இந்திய அளவில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு குழு அமைக்க கோரி பிரதமருக்கு தொண்டி அருகே கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

தொண்டி:

தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட விவசாய கிராமமான முகிழ்தகத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக மழையில்லாததால் விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் பல்வேறு ஊர்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் ஏசுபுரம் உட்பட முகிழ்தகம் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராம மக்களும் சுமார் 400 பேர் தண்ணீர் எடுக்க 5 கிலோ மீட்டர் தூரம் சென்றனர்.

இந்நிலையில் அங்கும் தண்ணீர் இல்லாததால் குடிதண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன் படுத்துகின்றனர். பெரும் பாலானோர் கூலி வேலைக்கு செல்வதால் தண்ணீரை விலைக்கு வாங்க முடியாத அவல நிலையில் உள்ளனர். தண்ணீர் பிரச்சினையை தெரிவிக்க போராட்டம் நடத்தினால் ஒரு மணி நேரம் கூட போராட்டம் நடத்த விடுவதில்லை.

எனவே குடிதண்ணீருக்கான இந்த அவல நிலை எங்கும் தொடராமல் இருக்க இந்திய அளவில் குடிநீர் பிரச்சினையைத்தீர்க்க ஒரு குழு அமைத்து அதன்படி எங்கும் குடிதண்ணீர் பற்றாக்குறையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க பாரத பிரதமருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.