செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

திருவெண்ணைநல்லூர் அருகே மனைவி சமையல் செய்யாததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), விவசாயி. இவருக்கு ஜெயந்தி (40) என்ற மனைவியும், 3 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை வழக்கம்போல் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவி ஜெயந்தியிடம் சாப்பாடு தருமாறு கேட்டார். அதற்கு ஜெயந்தி தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால் சமையல் செய்யவில்லை என்று கூறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏறபட்டது. இதில் மனமுடைந்த கண்ணன் வீட்டில்இருந்து வெளியே சென்றார்.

பின்னர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். திருவெண்ணைநல்லூர் சுடுகாட்டு பகுதிக்கு சென்று படுத்துக்கொண்டார். இரவு நீண்டநேரமாகியும் கண்ணன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கண்ணன் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews