திருவட்டார்:
திருவட்டார் அருகே மலவிளை முக்கலம்பாடு பகுதியில் பரளியாறு ஓடுகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த மழையால் தற்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
இந்த வழியாக தினமும் தோட்ட வேலைக்கு ஆண்களும், பெண்களும் செல்வது வழக்கம். இன்று காலை சிலர் பரளியாற்றங்கரை வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்றனர்.
அப்போது ஆற்றில் ஒரு பெண் பிணம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நீரோட்டத்தில் இழுத்துவரப்பட்ட அந்த பிணம் ஆற்றில் உள்ள பாறையில் தட்டியதால் மிதந்தபடி இருந்தது. ஆற்றில் பிணம் கிடந்த தகவல் திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இந்த தகவல் தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
பிணமாக மிதந்த பெண்ணுக்கு 60 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர். அவர் ஆற்றில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.