செய்திகள்

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருவட்டார்:

குலசேகரம் பனவிளை பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 28) தொழிலாளி. இவரது மனைவி சைனி (26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இவர் நேற்று வீட்டில் இருந்து வேலை பார்த்த இடமான பேச்சிப்பாறைக்கு சம்பளம் வாங்க செல்வதாக கூறி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவரம்பு கண்னேற்றி ஓடையின் அருகே வரும்போது திடீரென்று நிலை தடுமாறி அருகில் இருந்த ஓடையில் விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் யாராலும் அவரை மீட்க முடியவில்லை. இதனால் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மேரி அனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓடையில் கிடந்த விபினை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.

இதையடுத்து விபினின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது உறவினர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.