திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அபிவிருதீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் மணிகண்டன்(வயது20). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற போது தஞ்சையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த அரசு பஸ் மணிகண்டன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சந்தோஷ் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற மணிகண்டன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். சந்தோஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.