பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

வைகாசி பவுர்ணமி திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.

அதன்படி, இந்த மாதத்துக்கான (வைகாசி) பவுர்ணமி நேற்று மாலை 5.35 மணிக்கு தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.34 மணிக்கு முடிகிறது.

பவுர்ணமியையொட்டி அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மாலை 4 மணி முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 7 மணிமுதல் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கிரிவலப்பாதை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

SCROLL FOR NEXT