திருவண்ணாமலை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் வாரந்தோறும் பள்ளி விடுமுறை நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து குடியாத்தத்திற்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியாத்தத்தில் இருந்து சங்கிலி, ஆரம், மோதிரம் என சுமார் 50 பவுன் நகைகளை திருவண்ணாமலைக்கு கொண்டு வந்து உள்ளார். பள்ளியில் விழா முடிந்த நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை வேலை முடிந்த பிறகு ரேவதி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
கையில் இருந்த ஒரு கைப்பையில் அவர் 50 பவுன் நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் காட்பாடி செல்வதற்கு ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு ரெயில் வந்தவுடன் ரெயிலில் ஏறுவதற்கு தயாராக இருந்தார். மாலை 6.30 மணியளவில் ரெயில் நிலையத்திற்கு விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது.
ரெயில் வந்தவுடன் ரேவதி தனது குழந்தையுடன் ரெயிலில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தார். ரெயில் கிளம்பும் போது, தனது கைப்பை திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பையை அவர் பார்த்தபோது அதில் இருந்த 50 பவுன் நகையும் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். உடனே அவர் ரெயிலை நிறுத்துவதற்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
ரெயில் நின்றவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட ரெயில் பெட்டிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அப்போது ரேவதி அழுதபடி தனது கைப்பையில் இருந்து 50 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். இதையடுத்து சுமார் ½ மணி நேரம் கால தாமதமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரிடம் எழுத்துபூர்வமாக புகார் மனுவை மட்டுமே எழுதி வாங்கி கொண்டனர். ஆனால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. விழுப்புரத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தான் புகார் செய்ய வேண்டும். அவர்கள் தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள் என்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழித்தனர்.
இதையடுத்து அவர் புகார் செய்வதற்காக விழுப்புரத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.