மேற்கூரை இடிந்து விழுந்து இருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

திருவண்ணாமலையில் பஸ் நிலைய மேற்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலையில் இன்று காலை பஸ் நிலைய மேற்கூரை மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஊரடங்கை முன்னிட்டு திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் திருகோவிலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் அருகில் பயணிகள் அமரும் பகுதியில் உள்ள மேற்கூரை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது அப்போது பயணிகள் யாரும் பஸ் நிலையத்தில் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து மேற்கூரை உடைப்புகள் சரி செய்யப்பட்டன.

இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் இன்று காலை ஏற்கனவே பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இன்று பஸ்கள் இயங்கும் என்று பயணிகள் எதிர்பார்த்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் இல்லாததால் இன்று 2-வது முறையாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

பஸ் நிலைய கட்டிடம் பலமின்றி இருப்பதால் அதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மெத்தனம் காட்டக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பஸ் நிலையத்திற்கு தற்போது பயணிகள் வராத நிலையில் கட்டிட பராமரிப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை நகராட்சி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.