திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.
27-ந் தேதி இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், 28-ந் தேதி இரவு வெள்ளித்தேரிலும், 29-ந் தேதி மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்ளிட்ட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.
பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்திருவிழா மெகா திரை மூலம் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் திருக்கல்யாண மண்டபம் அருகிலும், வடக்கு கட்டை கோபுரம் அருகே உள்ள கலை அரங்கத்திலும் மெகா திரை மூலம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரணி தீபம் நேரடியாக ஒளிபரப்பபட்டது.
அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணிவரை கிழக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் கிளிகோபுரத்தின் உட்புறம் வந்து பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.
புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபம் ஏற்றுவார்கள்.
பக்தர்கள் வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட பரணி தீபம்.
அப்போது கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலை யாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோஷம் முழங்குவர். மகா தீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளிக்கிறது.
பக்தர்களின் வசதிக்காக 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 16 தற்காலிக பஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஐ.ஜி.க்கள், 2 டி.ஐ.ஜிக்கள், 18 எஸ்.பி.க்கள் உள்பட சுமார் 8,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.
மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போட மாட்டார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போடுவார்கள்.
அப்போது திருவண்ணா மலை நகரமே ஒளி வெள் ளத்தில் ஜொலிக்கும். கோவிலில் நடக்கும் வாண வேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். பரணி தீபத்தை போலவே மகா தீப தரிசனமும், மெகா திரை மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் உட்புறம் வடக்கு கட்டை கோபுரம் அருகே உள்ள கலை அரங்கத்திலும், திருவண்ணாமலை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களிலும் பக்தர்களின் வசதிக்காக மகா தீபம் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறை வாசகங்கள் அடங்கிய வண்ணப்பலகை கிரிவலைப்பாதையில் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் உள்பட அடிப்படை வசதி, மின்விளக்கு, சுகாதார பணி வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், திருக்குளங்கள் பாதுகாப்பு என அனைத்து வசதிகள் அந்தந்த துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் என போதிய மருத்துவ வசதி ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.