திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவரத்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளன. இது தொடர்பான எழுத்து தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடைபெறுகிறது.
வேப்பம்பட்டு ஸ்ரீராம் கல்வி நிறுவனத்தில் 3440 பேரும், அரன்வாயில் பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் 2600 பேரும், காக்களூர் சி.சி.சி. இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஆர்.எம் ஜெயின் பள்ளியில் 1080 பேரும், ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1420 பேரும், திருப்பாசசூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 1620 பேரும், பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1400 பேரும், கொழுந்தலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் 960 பேரும், டி ஆர் பி சி சி சி மேல்நிலை பள்ளியில் 804 பேரும் சேர்த்து 14 ஆயிரத்து 624 பேர் 9 மையங்களில் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே வரவேண்டும். காலை 10.15 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் கால்குலேட்டர், ப்ளுடூத் போன்ற மின் சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்தையும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 3 இன்ஸ்பெக்டர், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் கொண்ட குழுவினர் கண்காணிபு பணியில் இருப்பார்கள்.
தேர்வு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்படும். தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 80 கேட்கப்படும். இதற்காக 4 விதமான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்கத்தில் இருப்பவரை பார்த்து எழுத முடியாது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு ஆணை கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் இருந்து தகுதியுள்ளவர் என தெரிந்தால், அழைப்பு ஆணை நகலை எடுத்து புகைப்படத்தை ஓட்டி அத்துடன், விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதார சான்றுகளையும் இணைக்க வேண்டும். இந்த ஆதாரங்களை அருகில் உள்ள தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அளித்து தேர்வு எழுதலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.