செய்திகள்

மதுக்கடை திறக்க எதிர்ப்பு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

கிராம மக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர்:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் புதிய ‘டாஸ்மாக்’ மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது மதுக்கடைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் மதுக்கடை வேண்டாம். மதுக்கடையால் அப்பகுதி வழியாக செல்லும் மாணவிகள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மதுக்கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும். கடையை மூட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரித்தனர்.