கொலை 
செய்திகள்

திருத்தணியில் டிராக்டர் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை

முன்விரோதம் காரணமாக டிராக்டர் டிரைவரை கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி:

திருத்தணி குமாரகுப்பம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் ரகு (வயது 40). டிராக்டர் டிரைவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே வசித்து வரும் விக்கி என்ற பிரகாஷ்(20) தனது மோட்டார் சைக்கிளில் சாலையில் வேகமாக சென்றார். இதை ரகு கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் விக்கி, தனது நண்பர்களுடன் ரகு வீட்டின் அருகே தாயக்கட்டை விளையாடினார். இதை பார்த்த ரகு, அங்கு தாயக்கட்டை விளையாடக்கூடாது என்று கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த விக்கி, தனது நண்பர்களான மணி(22) மற்றும் 17 சிறுவனுடன் சேர்ந்து ரகு வீட்டுக்கு சென்றார்.

அங்கு ரகு தனது நண்பரான மனோகரன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது விக்கி மற்றும் அவரது நண்பர்கள் ரகு மீது பாய்ந்து கத்தியால் அவரது கழுத்து மற்றும் முதுகில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ரகு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருத்தணி போலீசார், கொலையான ரகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்கி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.