கைது 
செய்திகள்

திருத்தணி அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம் நகை பறித்த 2 பேர் கைது

திருத்தணி அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பு (வயது 55). இவர் திருத்தணி காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி கவுரி (50). அங்கன்வாடி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜப்பேட்டை என்ற கிராமத்தில் நடந்த உறவினர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றனர். இரவு 10 மணியளவில் அவர்கள் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் கார்த்திகேயபுரம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 5 பவுன் நகை, ஒரு செல்போன், ரூ.1000 போன்றவற்றை பறித்து சென்றனர்.

இது குறித்து கவுரி திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கார்த்திகேயபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக திரிந்து கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பெரியார் நகரை சேர்ந்த லட்சுமணன்(24), நவீன் (19) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் கவுரியிடம் கத்தி முனையில் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.