திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோவில் எதிரில் பச்சரிசி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கிருத்திகையின் போது மகா தீபம் ஏற்றப்பட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்.
மலைப்பகுதியில் அதிக அளவில் வளர்ந்து இருந்த கோரைபுற்கள், மற்றும் செடிகள் தற்போது கடும்வெயில் காரணமாக காய்ந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் மலையில் உள்ள கோரை புல்லில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது. தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.