திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 1030 ஓட்டு சாவடிகளில் 482 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
அவர் திருப்பத்தூரில் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதியூர், மடவாளம், வடுகமுத்தம்பட்டி, மரிமானிகுப்பம் ஜவ்வாது மலையில் புதூர்நாடு வசந்தபுரம், வாணியம்பாடி புதூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறதா? அங்கு அதிகாரிகள் உள்ளார்களா பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 6, 6ஏ 7,8,8ஏ படிவங்கள் வழங்கப்படுகிறதா வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான படிவம் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பொது மக்களிடம் வாக்காளர் பெயர் சேர்க்க வேண்டும் என வந்தவர்களிடம் 18 வயது பூர்த்தியாகி விட்டதா எனக் கேட்டு அறிந்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க முகாம் மீண்டும் வருகிற 11, 12ஆகிய தேதிகளில் ஓட்டுச் சாவடிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 1030 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்யும் சட்டசபை தொகுதிகளில் முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகவும் அங்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
உடன் திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் தாசில்தார் பத்மநாபன், துணை தாசில்தார் பழனி ராஜேஷ் உடனிருந்தனர்.