ஆண் குழந்தை கடத்தல் 
செய்திகள்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மங்கனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செரீப். இவருடைய மனைவி ரோ‌ஷன் சுல்தான் (வயது25).

இவருக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலை குழந்தைகள் வார்டுக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்தார்.

அவர் ரோ‌ஷன் சுல்தானிடம் தனது தங்கைக்கு இதே ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரிடம் உங்கள் ஆண் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால் நீங்களும் உடன் வாருங்கள் எனக் கூறியபடியே அந்த பெண் அவசரமாக குழந்தையை தூக்கினாள்.

அப்போது ரோ‌ஷன் சுல்தான் தனது காலணிகளை போட்டு விட்டு வருவதாக கூறினார். அதற்குள் அந்த பெண் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து சென்று விட்டார்.

வார்டில் இருந்து வெளியே வந்த ரோ‌ஷன் சுல்தான் குழந்தையுடன் பெண் மாயமானதால் திடுக்கிட்டார்.

இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்த நர்சிடம் கூறி கதறி அழுதார். உடனடியாக திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பர்தா அணிந்த பெண் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை குறித்த தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.