திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் வடக்கு தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் அஜித்குமார் (வயது 20), கட்டிட தொழிலாளி. இவரும், இவரது நண்பர்களான கந்தசாமி, மணி ஆகிய 3 பேரும் இன்று மதியம் 1 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் தனக்கன்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் கட்டிட தொழிலாளி அஜித்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் இருவரும் காயமடைந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.