செய்திகள்

தாய்-மகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்- திருமாவளவன்

திருக்கோவிலூர் அருகே தாய்-மகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalvan #thirukovilurmotherdaughter

மாலை மலர்

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி (வயது 46). இவர் தனது மகள் தனம் (15), மகன் சமயன் (8). ஆகியோருடன் வீட்டில் தூங்கியபோது மர்ம கும்பல் ஒன்று தாக்கி விட்டு சென்றது.

இதில் படுகாயம் அடைந்த சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். மயங்கி கிடந்த ஆராயி, மகள் தனம் ஆகியோர் மீட்கப்பட்டு புதுவை ஜிப்மர் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரும் தொடர்ந்து மயங்கிய நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாய்-மகளை பல்வேறு அரசியல் கட்சியினர் பார்வையிட்டு வருகின்றனர். நேற்று மாலை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஆராயி, தனம் ஆகியோரை பார்வையிட்டார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் திருமாவளவன் தாக்குதல் நடத்தப்பட்ட வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு சென்றார். அங்கு ஆராயின் வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வெள்ளம்புத்தூர் மாரியம்மன் கோவில் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெண்கள் உண்ணாவிரத போராட்டம் இருந்து வந்தனர். அங்கும் திருமாவளவன் சென்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளம்புத்தூரில் நடத்தப்பட்ட காட்டு மிராண்டிதனமான தாக்குதலில் சிறுவன் சமயன் இறந்துள்ளான். அவனது தாய்-அக்காள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோரை நேற்று மாலை திரைப்பட இயக்குனர் கவுதமன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, வெள்ளம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய்-மகள், சிறுவன் ஆகியோர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான்.

தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனையைவிட மோசமான தண்டனை வழங்க வேண்டும் என்றார். #tamilnews #Thirumavalvan #thirukovilurmotherdaughter