சென்னை:
மருத்துவக் கல்லூரி படிப்புக்கும், பல் மருத்துவக் கல்வி படிப்புக்கும் நீட் தேர்வு எனும் சமூக நீதிக்கு குழிபறிக்கும் அநீதியான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கிராமப்புற குடும்பத்துப் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் தமிழக அரசு கல்வித் திட்டத்தில் பள்ளி இறுதித் தேர்வை எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்று உலகப் புகழ் பெற்ற மருத்துவர்களாகி சேவை செய்து வருகிறார்கள். இந்த நிலையை நிர்மூலமாக்கும் நோக்கத் தோடு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தும், அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மத்தியில் ஆளும் மோடி அரசு ஏற்பாடு செய்யவே இல்லை.
இந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ராயநல்லூர்- விலக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் தன் தந்தை கிருஷ்ணசாமியோடு நேற்று எர்ணாகுளத்திற்குச் சென்று ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து இன்று தேர்வு எழுதச் சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் அவரது தந்தை கிருஷ்ணசாமி தங்கியிருந்த விடுதியிலேயே மாரடைப்பால் உயிர் நீத்தார்.
இந்தச் செய்தியை அறிந்தவுடன், கேரள முதல்வர் பினராயி விஜயனோடு நான் தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்காததால், கேரளா ஆளுநர் சதாசிவத்துக்கு தகவல் தந்தேன். ஆளுநர் உடனே ஆவன செய்வதாகக் கூறினார். எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுநர் தகவல் தந்து, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
எர்ணாகுளத்தில் உள்ள என் நண்பர்களிடம் கூறி, அம்மாணவனுக்குத் தேறுதல் கூறி, அவரது தந்தையின் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.
தமிழக மாணவ- மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா? என்ற கேள்விதான் முன் நிற்கிறது.
தமிழக மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்குச் சென்றபோது, சோதனை என்ற பெயரால் அவர்களது மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது; மன்னிக்க முடியாதது. இத்தகைய மனவேதனையுடன் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
இந்திய அளவில் நீட் தேர்வு கூடாது என்பது விடுதலை சிறுத்தையின் நிலைப் பாடாகும். எனினும் தற்போது நீட் தேர்வு நடைபெறுகின்ற சூழலில் அதனை முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், கேரளாவிற்கும், ராஜஸ்தானுக்கும் சென்று தேர்வு எழுதக்கூடிய நிலை வேதனைக்குறியதாகும். மாநில அரசு இதனை கண்டும் காணாமல் இருப்பது வன்மையாக கண்டனத்திற்குரியதாகும்.
இந்த நிலையில் கேரளாவில் மாணவனின் தந்தை அலைக்கழிப்பால் மரணம் அடைந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகளை சோதனை என்ற பெயரால் இந்த ஆண்டும் மிக மோசமான முறையில் நடத்தி உள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் இந்த கேவலம் இல்லை.
மாணவ-மாணவிகளை அவமதிப்பது, இழிவு செய்வது சகித்துக் கொள்ள முடியாத வன்கொடுமையாகும். இதனை விடுதலை சிறுத்தை மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்த தேர்வை நடத்தும் பொறுப்பை பள்ளி கல்வி வாரியங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரையில் இனி புதிதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கூடாது.
தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் வகையில் அலைக்கழிக்கப்படுவதற்கு தமிழக அரசின் மெத்தன போக்கே காரணமாகும்.
வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போனாலும் உயர்ந்த தகுதி மதிப்பெண்களை பெற முடியாமல் போனாலும் அதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வெளி மாநிலத்தில் தேர்வு எழுத வைத்து தமிழக மாணவர்களை அலைக் கழித்துள்ளனர். தமிழக மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்க இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் படித்து தமிழகத்தில் மருத்துவர் ஆகும் ஏழை - எளிய மாணவர்களுக்கு தடையாக இருக்கும் இந்த நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்து உள்ளது. இந்த முறைகேட்டில் தேர்வு மையத்துக்கும் சி.பி.எஸ். இ.-க்கும் தொடர்பு உள்ளது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு மையங்களில், சோதனை என்கிற பெயரில், பயங்கரவாதிகளை போல் பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்வது கடுமையான மனித உரிமை மீறலாகும்.
ராணுவம், போலீஸ் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும்போது கூட இத்தகைய கொடூரமான அத்துமீறல்கள் நடப்பதில்லை. தமிழக மாணவர்களை இவ்வாறு சித்திரவதை செய்வதன் மூலம், அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக தேர்வு எழுத முடியாத சூழ்நிலையை உருவாக்குகின்றனர். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் மத்திய அரசில் உள்ள ஆட்சியாளர்களுக்கு அவப் பெயரை உருவாக்கும் என்பதை அறிந்தும், இவ்வாறு செய்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #NEET #NEET2018