விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர், எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்ற தகவலை அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதில் முறையான கணக்கெடுப்பு இல்லை. இதற்கு மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணமாகும்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக எந்த வேட்பாளர் மீது புகார் வருகிறதோ, அந்த வேட்பாளரை தமிழக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.