செய்திகள்

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- திருமாவளவன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #cauverymanagementboard

மதுரை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே ஆள்கின்றன. தாங்கள் ஆள வில்லை என்பதனால், தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிக் குறைப்பு செய்திருப்பதை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

29-ந் தேதிக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை என்றால், தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு அகில இந்திய அளவில் நெருக்கடி கொடுக்க வேண்டும்.

தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்க வில்லை. அதற்கு தமிழகம் பொருத்தமான இடம் இல்லை.

டெல்டா மாவட்டங்களில் 28 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து மத்திய அரசு மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற் சிக்கிறது.

வருகிற 27-ந் தேதி அம்மாப்பேட்டையில் விவசாயிகள் ஒருங்கிணைக்கும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் உச்ச நீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி 28-ந் தேதி சென்னையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக, பட்டியிலிலேயே பரிந்துரைக்காத சூரிய நாராயண சாஸ்திரியை தான் தோன்றித் தனமாக கவர்னர் நியமித்திருப்பதை தமிழக அரசு தட்டிக் கேட்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டப் பணிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். மதுரை மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற 30 ரூபாயை 200 ஆக உயர்த் தியிருப்பதை திரும்பபெற வேண்டும். மதுரை மாநகராட்சி, குப்பைக்கு வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதை பாராட்டுகிறேன்.

அவர் மத்திய அரசுக்கு அடிபணியாமல் தமிழக நலன்களுக்கான திட்டங்களை தீட்டி அவர்களது முழுக் காலத்தையும் ஆட்சி செய்து முடிக்க வாழ்த்துகிறேன்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #tamilnews #thirumavalavan #cauverymanagementboard

SCROLL FOR NEXT