செய்திகள்

நடிகர்கள் மூலம் தமிழகத்தில் காலூன்ற பா. ஜனதா முயற்சி செய்கிறது: திருமாவளவன் பேட்டி

மெர்சல் படத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, மறை முகமாக அப்படத்திற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கிறது. நடிகர்கள் மூலம் தமிழகத்தில் காலூன்ற பா. ஜனதா முயற்சி செய்கிறது என்று திருமாவளவன் கூறினார்.

மாலை மலர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. பலி எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அனுப்பி வைத்த மருத்துவக்குழு டெங்கு காய்ச்சல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசுக்கு என்ன உதவி செய்யப்போகிறது என்றும் தெரிவிக்கவில்லை.

டெங்கு காய்ச்சல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தை திசை திருப்புவதற்காக தற்போது மெர்சல் திரைப்படத்தை கையில் எடுத்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நான் அந்த படத்தை இன்னும் பார்க்க வில்லை. அதில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஜோக்கர் திரைப்படம் முழு நீள அரசியல் காமெடி படம். அந்த படத்தை பற்றி விமர்ச்சிக்காதவர்கள் தற்போது மெர்சல் படத்தை விமர்சிப்பதன் மூலம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவில் மத்திய-மாநில அரசை சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். மெர்சல் படத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, மறை முகமாக அப்படத்திற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கிறது. நடிகர்கள் மூலம் தமிழகத்தில் காலூன்ற பா. ஜனதா முயற்சி செய்கிறது.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா மரணத்தில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அரசியல் இருக்கிறது என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அனிதா குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. அதே போல் தமிழக அரசு வழங்கும் நிதியையும், வேலையையும் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன். பணப் புழக்கம் காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

பா.ஜனதாவுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வருவதால் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் என்னையும், எனது கட்சியையும் விமர்சித்து வருகிறார். எதுவாக இருந்தாலும் அது அவர்களின் மனச்சாட்சிக்கு எதிரானது.