செய்திகள்

வைரவிழா ஆண்டு: மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாடு மின்சார வாரிய பொதுத்துறை நிறுவன வைரவிழாவின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணிக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மின்சார வாரிய அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பேரவை தலைவருமான தொல். திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் கு.கா.பாவலன் ஆகியோர் மின்சார வாரிய அமைச்சர் தங்கமணிக்கு கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கடந்த 1.7.1957-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் என்கிற பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கியது. அது உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் மின்சார வாரியம் வைர விழா காணுகிறது.

இந்த வேளையில தமிழக அரசின் முயற்சிகளின் பலனாக 18,304 மெகாவாட் மின் நிறுவு திறனை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சுனாமி, தானே மற்றும் வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போது அவற்றை செம்மைப்படுத்தும் பணிகளில் மின் வாரிய பணியாளர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் வாரிய பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பொன் விழா ஆண்டின் போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

சுமார் 2 கோடியே 79 லட்சம் மின் பயனீட்டாளர்களுக்கு இரவு- பகல் பாராமல் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வரும் மின்வாரிய ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் வைரவிழா பரிசாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த மனுவினை கு.கா.பாவலன் அமைச்சர் தங்கமணியிடம் வழங்கினார்.