சென்னை:
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கே:- மணல்குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அது முழுமையாக மூடப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறாரே?
பதில்:- ஏற்கனவே தமிழக அரசுதான் மணல் குவாரிகளை நடத்தி கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. எப்போது இதனை இவர்கள் தனியார் இடத்தில் ஒப்படைத்தார்கள் என்பது தெரியவில்லை. மீண்டும் அரசே ஏற்று நடத்தும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக மூடுவோம் என்று சொல்வதை ஏன் இப்போதே செய்யக்கூடாது. அண்டை மாநிலங்களான கேரள, ஆந்திரா, கர்நாடக ஆகியவற்றில் ஆற்று மணலை சுரண்டும் வணிகம் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து தான் அந்த மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
அவர்கள் பெரும்பாலும் எம்.சேன்ட் என்றும் கல்குவாரியில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை மணலை தயாரிக்கிறார்கள். தமிழகத்திலும் அதனை ஏன் உடனடியாக பின்பற்றக் கூடாது.
கே:- மணல் குவாரி ஒப்பந்ததாரர் டைரியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறதே?
ப:- வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக இப்படி ஒரு தகவலை வெளியிட்டதாக தெரியவில்லை. அன்புநாதன் என்பவரை சோதனையிட்ட போது வருமான வரிதுறை அதிகாரிகள் அதில் தொடர்புடைய பலருடைய பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையிட்ட போதிலும் சில விவரங்களை அதிகாரிப்பூர்வமாக வெளியிட்டனர்.ஆனால் சேகர் ரெட்டி தொடர்பான விவரங்களை அப்படிவெளியிட்டதாக தெரியவில்லை.
கே:- இது குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிறதே?
ப:- அது பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனாலும் இதில் தமிழக அரசுக்கோ, தலைமை செயலாளருக்கோ என்ன அதிகாரம் உள்ளது என்று விளங்கவில்லை. முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்தில் அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் கோட்டையில் இருக்கும் போதே வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.
இதில் இருந்து தமிழக முதல்வருக்கும் தலைமை செயலாளருக்கும் எத்தகைய அதிகாரம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கே:- மதவாதசக்திகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க இடது சாரிகளுக்கு அழைப்பு விடுத்தீர்களோ?இது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அச்சாரமா?
ப:- தேர்தல் கூட்டணியில் யார் யாரை சேர்த்து கொள்வது என்பது கூட்டணிக்கு தலைமை வகிக்கின்ற கட்சிகள் தான் முடிவு செய்யும். இதில் நான் எந்தமுடிவையும் எடுக்க முடியாது.
எங்கள் கவலையெல்லாம் வகுப்புவாத அரசியல் தேசநலன்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று தான். அதற்காக முரண்பாடுகள் இருந்தாலும் மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
தேசிய அளவில் வகுப்பு வாதத்தை எதிர்ப்பு இடது சாரிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். ஆகவே இடதுசாரிகள் வலுஉள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
கே:- உங்கள் அழைப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சி மறுப்பு தெரிவித்துள்ளதே?
ப:- தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மதசார் பற்ற கட்சிகளுடன் போராட்டகளங்களில் கைகோர்ப்போம் என்று கூறியிருக்கிறார். வகுப்புவாத அரசியல் தலை தூக்கியுள்ள சூழலில் தேர்தல் களத்தையும் ஒரு போராட்டகளமாகவே பார்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கருதுகிறது.
இவ்வாறு திருமாளவன் கூறினார்.