பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திரு மாவளவனை கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என விமர்சனம் செய்தார். இதனை கண்டித்து கரூரில் நடந்த பா.ஜ.க. மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், தமிழிசை சவுந்திரராஜனை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை பா.ஜ.க. தொண்டர்கள் தாக்கினர். இதே போல் மயிலாடுதுறையிலும் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருமாவளவனின் தனிச் செயலர் பாவரசு, நெறியாளர் நாவரசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் விடுதலை சிறுத்தை கட்சியினரை பார்த்து கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், ரவுடியிசம் செய்பவர்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்தினர்.
கரூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுவதை அறிந்து போராட்டம் நடத்துவதற்காக கட்சி தொண்டர்கள் 4 பேர் இரு சக்கர வாகனத்தில் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் மண்டபத்தில் இருந்து 700 மீட்டருக்கு முன்பே 4 பேரையும் போலீசார் கைது செய்து விட்டனர்.
அதன் பிறகு போலீஸ் வேனில் ஏற்றிய அவர்களை, பா.ஜ.க.வினர் வாகனத்தில் இருந்து இழுத்து போட்டு தாக்கியுள்ளனர். போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. யார் சமூகநீதியை, அமைதியை சீர்குலைக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
ஆட்சிக்கு வர துடிக்கும் நிலையிலேயே இப்படி செயல்பட்டால் சமூக நீதி, அமைதி என்னவாகும். சாதிய வாத, மதவாத சக்திகள் வேரூன்றி விடக்கூடாது, வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் ஜனநாயக ரீதியில் போராடுகிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இயக்கங்களுடன் கைகோர்த்து செயல்படுவதால் பா.ஜ.க.வும், சங்பரிவார் அமைப்புகளும் எங்களை பார்த்து எரிச்சல் அடைகிறார்கள்.
2 தினத்திற்கு முன்பு சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மாணவர் அணியினர் மார்க்சிஸ்ட் கட்சி கொடியை தீவைத்து அவமதித்துள்ளனர். டெல்லியிலும் இதுபோன்று மற்ற கட்சி அலுவலகங்கள் முன்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அக்கட்சி தலைவர் அமித்ஷாவே ஒரு கட்சி அலுவலகம் முன்பு தலைமை தாங்கி போராட்டம் நடத்தியுள்ளார்.
பா.ஜ.க.வில் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தாலும், யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்துவது இல்லை. ஆனால் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா ஆகியோர் தங்களை தேசிய தலைவர்களாக நினைத்து கொண்டு கீழ்த்தரமான அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள்.
தமிழக காவல் துறை அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு இயங்குகிறது என்றாலும் அதனை முழுமையாக இயக்குவது பா.ஜ. க.தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கடந்த 4, 5 தினங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது எங்களுக்கு விளங்க வில்லை.
கொடுங்கையூரில் 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் வெளிப்படையாக பரவி வருவதாக கருத்துக்களை கூறியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்து பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது.
மாட்டிறைச்சிக்கு தடை, தலித் தலைவர்கள் தலை நிமிரக் கூடாது என்பதற்கான செயல்பாடுகள் என இதையெல்லாம் பார்க்கும் போது இந்து பயங்கரவாதம் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இந்த கருத்துக்களை கட்சி தொடங்குவதற்கு முன்னரே துணிச்சலுடன், நேர்மையுடன், தீரத்துடன் நடிகர் கமலஹாசன் வெளிப்படுத்தியதை நெஞ்சார பாராட்டுகிறேன். அவரது மனவலிமையும், மன உறுதியும் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.