மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை திருமாவளவன் சந்தித்த காட்சி 
செய்திகள்

7 பேர் விடுதலை - மத்திய மந்திரி அமித்ஷாவிடம் திருமாவளவன், அற்புதம்மாள் வலியுறுத்தல்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவிடம் திருமாவளவன், அற்புதம்மாள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

மாலை மலர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

எனவே 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரத்தில் கவர்னர் தாமதிக்காமல் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று பிற்பகல் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அவருடன் ரவிக்குமார் எம்.பி., பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அமித்ஷாவிடம் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.