விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் முன்னணியினர் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி நிவாரண பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதும் சரி, இ.பி.எஸ். முதல்வராக இருக்கும்போதும் சரி இருவருமே தமிழர்களின் விரோத போக்கை கடைப் பிடிக்கிறார்கள்.
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மறுவாழ்வு பணியை இந்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக இந்திய அரசு தலையிட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
20 ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். அரசியலுக்கு வருவது அவர் கையில் தான் உள்ளது. ரஜினியை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. துடிக்கிறது.
நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். அவரது மறு சீராய்வு மனுவை பரிசீலிக்காமல் ஒதுக்கியது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது தவறான முன் உதாரணமாக இருக்கக்கூடாது. இது பற்றி நாடாளுமன்ற இரு அவைகளும் கூடித்தான் விசாரிக்க வேண்டும்.