செய்திகள்

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 5 மாவட்டங்களிலும் நேற்று லேசான தூறலுடன் மழை பெய்தது.

திருச்சி:

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 5 மாவட்டங்களிலும் நேற்று லேசான தூறலுடன் மழை பெய்தது. திருச்சியில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மாவட்டத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று 5-வது நாளாக கட லுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.

இதனால் 550-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம், பாடாலூர், வேப்பூர், ஆலத்தூர், செட்டிக்குளம், பெரம்பலூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளம், பருத்தி தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், மழையின் காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கோடை கால தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க இந்த மழை உதவியாக இருக்கும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று லேசான காற்றுடன் மழை பெய்தது. அரியலூர் மாவட்ட டெல்டா பகுதிகளான திருமானூர், தா.பழுர் உள்ளிட்ட பகுதிகளில் தாமதமாக பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வரும் நிலையில், அப்பயிர்களுக்கு இந்த மழை பயனளிப்பதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று மழை பெய்த நிலையில் இன்று காலை 5 மாவட்டங்களிலும் வெயில் அடித்து வருகிறது.