செய்திகள்

திருச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

தொட்டியம் அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 26). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் நாமக்கல் மாவட்டம் பெரிய சிவந்தாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (26).

இந்தநிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த ராஜசேகர் தனது நண்பர் மணிகண்டனை பார்க்க பெரிய சிவந்தாம் பட்டிக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து ராஜசேகர் சென்னை செல்ல முடிவு செய்தார். இதற்காக அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக மணிகண்டனின் மோட்டார் சைக்கிளில் 2 பேரும் சென்றனர்.

நேற்றிரவு செவந்தி பட்டி- தொட்டியம் சாலையில் தொட்டியம் அருகே உள்ள பூங்காற்று வாரி என்ற இடத்தில் உள்ள சாலை வளைவில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் ராஜசேகரும், மணிகண்டனும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிச்சைக்காக தொட்டியம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மணிகண்டனுக்கும், ராஜசேகருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது .

இதனால் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் டாக்டருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இதற்கிடையே மணிகண்டன் அங்கேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ராஜசேகரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் ராஜசேகரும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். உடனடியாக சிகிச்சை அளிக்காமல் இழுத்தடித்த டாக்டர்களின் அலட்சியப்போக்கே இரண்டு வாலிபர்களும் பலியானதற்கு காரணம் என்று அவர்களது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.