செய்திகள்

வங்க கடலில் 4-ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு

வங்க கடலில் 4-ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சர்வதேச வானிலை மையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் தான் 75 சதவீத பகுதிகளுக்கு மழை கிடைக்கிறது.

அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும், புயல்களாலும் அதிக அளவு மழை பெய்யும்.

தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென் மேற்கு அரபிக் கடல் பகுதி நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த சில நாட்களில் மழை குறையும்.

இந்த நிலையில் மலேசிய தீபகற்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 72 மணி நேரத்தில் (டிசம்பர் 1-ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

3 நாட்களுக்கு பிறகு இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் 4-ந்தேதி வாக்கில் தீவிர புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதியில் மையம் கொண்டு பெருமளவில் மழை பெய்யும் என்றும் பல்வேறு சர்வதேச வானிலை மையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

5-ந்தேதிக்கு மேல் இது கரையை கடக்கும் அல்லது பலவீனம் அடைந்து ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். 6-ந்தேதி வரை அம்மாநிலத்தை புயல் மிரட்டும் என்றும் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். வானிலை தொடர்பான வின்டி.காம் இணைய தளமும் டிசம்பர் 7-ந்தேதி வரையிலான புயல் தொடர்பான செயற்கைகோள் ராடர் படங்களை கணித்து வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 1-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தே புயல் வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் குறைந்தாலோ, திசை மாறினாலோ இதில் மாற்றம் ஏற்படும் என்றும் வானிலை தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய தீப கற்பத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையையும், வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் நிலவும் தட்ப வெப்ப நிலையையும் இந்திய வானிலை மையம் கணித்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே சென்னை மண்டல வானிலை மையம் தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் சராசரியாக 34.1 செ.மீ. மழை பெய்யும். தற்போது வரை இதில் 27.8 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னைக்கு அக்டோபர் 1-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரை சராசரியாக 61 செ.மீ. மழை கிடைக்கும். தற்போது 81.9 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பை விட கூடுதலாக 34 சதவீதம் மழை பெய்துள்ளது. நவம்பர் 2-ந்தேதி மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.